“அந்தச் சகோதரி ரொம்ப அழகாக இருப்பார்கள்” என ஒருவரை நாம் அடையாளப்படுத்தும்போது, அவர்களுடைய வெளித்தோற்றத்தைப் பற்றியே பேசிக் கொள்கிறோம். “அலங்கரித்தல்” என்றாலே, பலவகையான முகச் சாயங்களைக் கொண்டு நம்மை அழகுபடுத்திக் கொள்வதும் விதவிதமான Costumes, Cosmetics இவையே நம்முடைய நினைவுக்கு வருகின்றன. பல Skin Care hositals இன்றைய நாட்களில் பெருகி வருகிறது. இளம் வாலிபர்களால் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் ஒரு விஷயமே இந்த “Beauty tips”.
அழகு என்பது தோற்றத்தை அல்ல, அது குணத்தை குறிக்கக்கூடியது. தோற்றம் என்பது மாறக்கூடியதும் அழியக்கூடியதுமாய் இருக்கிறது. ஆனால் குணமோ வளர்ச்சியடையக் கூடியதும் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிறது.
கீழ்ப்படிதல் என்னும் அலங்காரம்
மனைவிகள் தங்கள் புருஷர்களிடம் கீழ்ப்படிதல் என்னும் குணத்தைக் காட்டுவது தேவனை மகிழ்ச்சியூட்டக்கூடியதாய் இருக்கிறது. இதனையே 1 பேதுரு 3:5 -ஆம் வசனம் கூறுகிறது. தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பழைய ஏற்பாட்டு ஸ்திரீகள் தங்கள் புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். வேறொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது:
“அவர்கள் தங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறாகவே அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டார்கள்.
கீழ்ப்படிதலின் முன்மாதிரி கிறிஸ்து
பல தேசங்களில் சிதறியிருக்கிற பாடுபடும் கிறிஸ்தவர்களுக்கு தனது முதல் நிருபத்தை எழுதும் பேதுரு, “குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகிப்பதைவிட, நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடு சகிப்பதே தேவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்“ என்கிறார். 1 பேதுரு 2:20
இங்கு பாடு அனுபவித்த நம் நேசரை நமக்கு முன்மாதிரியாகக் காட்டுகிறார். “வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்த…” நேசரை முன்மாதிரியாகக் காட்டி விட்டு மனைவிகளே இப்படியாகவே (“அந்தப்படியே” 1 பேதுரு 3:1) உங்கள் சொந்தப் புருஷர்களுக்கு கீழ்ப்படியுங்கள் என ஆலோசனை கொடுக்கிறார்.
கீழ்ப்படிந்து அலங்கரித்துக் கொண்ட சாராள்
நம் நேசருடைய தாழ்மையான பாடுபடுதலை தனது இரண்டாம் அதிகாரம் இறுதிப்பகுதியில் கூறிவிட்டு மூன்றாம் அதிகாரம் துவக்கத்தில் மனைவிகளின் கீழ்ப்படிதலை எழுதும் பேதுரு விதவிதமான சிகை அலங்காரமோ, பொன் ஆபரங்களையோ, விலையேறப்பெற்ற வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதலோ உண்மையான அலங்கரிப்பு அல்ல என்றும், சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு உண்மையான அலங்கரிப்பு எனவும் அதுவே தேவனுடைய பார்வையில் மிகவும் உயர்ந்த மதிப்புள்ளது என எழுதுகிறார். அந்நேரத்தில் பழைய ஏற்பாட்டு ஸ்திரீகளைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக சாராளுடைய கீழ்ப்படிதல் மூலம் நமக்கு நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார். “சாராள் தன் கணவனை ஆண்டவனே (Lord, எஜமான் ஆதி. 18:12) என அழைத்து அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்” என வாசிக்கிறோம். ஆபிரகாமுக்கு சாராள் அடிமைப் பெண் அல்ல, ஆபிரகாமோடு ஒரே சரீரமான வாழ அழைக்கப்பட்டவளே. ஆனால் தேவன், தன் கணவருக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு பணிவுடன் நடந்துகொண்டாள்.
அன்பு சகோதரிகளே! நம்முடைய வாழ்க்கைத் துணையைக் காட்டிலும் ஒருவேளை நாம் அதிகக் கல்வி, வேத அறிவு, சமூக அந்தஸ்து உடையவர்களாக இருக்கலாம். ஆனால் வேதம் எக்காலத்திற்கும் உரிய சத்தியத்தையே பேசுகிறது.நம் சொந்தப் புருஷர்களுக்கு கிறிஸ்து, தாழ்மையோடு நியாயமாய் தீர்ப்புச் செய்கிற தேவனுக்கு தம்மை ஒப்புவித்து வாழ்ந்ததுபோல நாமும் ஒப்புவித்து வாழுவோம்.சாராளைப் போல நாமும் நம் சொந்த கணவன்மார்களுக்கு கீழ்ப்படிந்து நம்மை அலங்கரித்துக் கொள்வோம். நம்முடைய “அழகின் இரகசியத்தை” நம் வருங்கால தலைமுறைகள் கண்டு, அதன்படி தங்களை அலங்கரித்துக்கொள்ளட்டும்.

Facebooktwitterlinkedininstagramflickrfoursquaremail