Understand the Critical Situation
முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சம்பவம். நாம் எல்லாருக்கும் அறிந்த ஒரு சம்பவமே, நோவாவின் காலத்தில் பெரும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவு.
தேவன் பாவத்தை வெறுப்பவர் பாவியை நேசிப்பவர்.
எனவே தான் பாவத்தை தண்டிக்கிற ஆண்டவர் அந்த தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இரட்சிப்பின் வழியையும் ஆயத்தப்படுத்துகிறார்.
நோவாவின் காலத்தில் பேழை ஒன்றே இரட்சிப்பின் வழி. பேழைக்குள் நுழைவோர் இரட்சிக்கப்படுவர். அதை நம்பாதவர் நிலை என்ன? அழிவு! இந்த நற்செய்தியை, ஒரே வழியை, அறிவிக்க ஒரு நோவா அப்போது இருந்தார். அவர் எத்தனையோ வருடங்களாக அந்த இரட்சிப்பின் நற்செய்தியை ஜனங்களுக்கு அறிவித்தார். ஜனங்கள் வேறேதும் செய்ய வேண்டியதில்லை. நோவா சொன்னதை நம்பி அவர் சொன்னது போல அந்த பேழைக்குள் வந்திருந்தால் மட்டும் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் ஒருவரும் அதை நம்பவும் இல்லை, பேழைக்குள் நுழையவும் இல்லை. அதனால் நஷ்டம் யாருக்கு? நம்பாதவர்களுக்கு தானே ஒழிய நோவாவிற்கல்ல. அவர்கள் ஒருவேளை நினைத்திருப்பர், நோவா பேழைக்குள் வர ஆள் சேர்க்கிறார் என்று…
இன்றும் அதேதான் அல்லவா நிலைமை?
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன் ( ரோமர் 6:23)
எவ்வளவு தெளிவாக இரட்சிப்பின் வழி சொல்லப்பட்டுள்ளது! நாம் எல்லாரும் பாவிகள், நரகத்திற்கே பாத்திரர். ஆனால் தேவன் நமக்கு அளிப்பது நித்தியஜீவன். அதை பெற்றுக் கொள்ள வேண்டிய ஒரே ஒரு பொறுப்பு தான் நம்முடையது. அன்று பேழைக்குள் பிரவேசித்தவர்கள் இரட்சிக்கப்பட்டனர். இன்று கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வோர் இரட்சிக்கப்படுகின்றனர்.
கிறிஸ்துவை மாத்திரம் தெய்வம் என்று சொல்வதுதான் சிலருக்கு கடினமாக தோன்றுகிறது. ஆனால் அதுதான் அல்லவா உண்மை!! ஏனென்றால் உலகத்தை சிருஷ்டித்த கடவுளே மனிதனாக வந்தது இயேசுகிறிஸ்து மட்டும்தான். அது மாத்திரமல்ல உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் அவர்களுடைய பாவங்களுக்காகவும் பிராயச்சித்தமாக மரித்தார். அவர் தேவன் என்பதற்கு அத்தாட்சியாக, மரித்து மூன்றாம் நாளில் உயிரோடுக்கூட எழுந்தார். இதனால்தான் இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்றும், இயேசு கிறிஸ்துவே வழி என்றும் நாம் சொல்கிறோம்.
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்( அப்போஸ்தலர் 4:12).
இயேசுகிறிஸ்து சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” ( யோவான் 14:6).
இவ்வாறாக சொன்னவர்கள் வேறு யாரேனும் உண்டா? வேறு யாரும் சொல்லவும் முடியாது. ஏனென்றால் நான் முன்பு சொன்னது போலவே “தேவனே மனிதனானவர்” இயேசு கிறிஸ்து மட்டுமே. மற்றவர்கள் எல்லாரும் மனிதனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஒருவேளை கடவுள் என்று சொல்லப்பட்டவர்களாக மாறியிருக்கலாம். அல்லாமல் உண்மையான தேவன் இயேசு கிறிஸ்து மட்டுமே. அவரிடத்தில் மட்டுமே இரட்சிப்பு உள்ளது.
நோவாவின் காலத்தில் பேழை மட்டுமே இரட்சிப்புக்காக இருந்ததுபோல, இப்பொழுது நாம் நரகத்திலிருந்து இரட்சிக்கப்பட ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே. இந்த இயேசு கிறிஸ்துவை என்னுடைய தெய்வமாக நான் ஏற்றுக் கொள்ளும் பொழுது, அவரே என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் என்று நான் நம்பும் பொழுது, நான் அந்த நரகத்திலிருந்து காப்பாற்றுப்படுகிறேன், இரட்சிக்கப்படுகிறேன். ஆகையால் இது ஒன்றே வழி.
இவ்வளவு தெளிவாக நற்செய்தி சொல்லப்பட்டிருக்க, அதை ஏற்றுக் கொள்ளாமல் அழிந்து போவது எவ்வளவு பெரிய நஷ்டம்!
இனி, ஏற்கனவே பேழைக்குள் பிரவேசித்த விசுவாசிகளாகிய நம்மிடத்தில் ஒரு கேள்வி : நீங்கள் நோவாவைப் போல நற்செய்தியை கூறுகின்றீர்களா? “யாரும் நான் சொல்வதை கேட்கப்போவதில்லை, நம்பப் போவதில்லை, பின்னே ஏன் சொல்ல வேண்டும்”, என்று நினைக்கிறீர்களா? இந்த நற்செய்தியை அறிந்த நாம் அதை அறிவிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரியுமா? மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்க, முழு சீருடையும் அழகாய் அணிந்துக்கொண்டு, மருத்துவர் சும்மா நின்றுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதுப்போலதான் நாம் செய்யும் காரியமும் இருக்கிறது. நரகத்திற்கு செல்லும் ஆத்துமாக்களை கண்டும் காணாதவர் போல் நிற்கிறோமே நாம்? இந்த நற்செய்தியை அறிந்த நாம் மௌனமாய் இருப்பது எவ்வளவு பெரிய தவறான காரியம், எவ்வளவு பெரிய துரோகம். இந்த உண்மையை அறிந்த நோவா பேசாமலிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும். அவர் அந்த நற்செய்தியை கூறாமலிருந்திருந்தால் இரத்தப்பழி அவர்மேல் சுமந்திருக்கும். ஆனால் அவர் ஓயாமல் அந்த நற்செய்தியை சொல்லக் கூடியவராக இருந்தார். பேழைக்குள் பிரவேசிப்பர் மாத்திரமே இரட்சிக்கப்படுவர். அந்த பேரழிவில் இருந்து மீட்கப்படுவர் என்று. அதேப்போல இன்றும் அழிவின் பாதையில் நரகத்தின் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறவர்களை நாம் பார்க்கும் பொழுது நம்முடைய உற்றார், உறவினர், நம்முடைய நண்பர்கள், நம்மோடு வேலை செய்பவர்கள், நம்முடைய அண்டை வீட்டுக்காரர்கள், நாம் அன்றாடம் காணும் மனிதர்கள் ஆகிய இம்மனிதர்களின் இரட்சிப்பு நம் மேல் விழுந்த கடமை அல்லவா? அவர்களிடத்தில் இந்த நற்செய்தியை கூறாமல் இருந்தால் நாம் செய்வது எவ்வளவு பெரிய தவறு!
நாம் கூறினாலும் அவர்கள் அதை ஒத்துக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று சொல்ல முடியாது. எனவே அவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டியதும் நம்முடைய கடமையாக இருக்கின்றது. அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக நாம் அன்றாடம் திறப்பின் வாசலில் நிற்க வேண்டியது மிக மிக அவசியமான ஒரு காரியம். நாம் ஆண்டவருடைய வசனத்தைப் பேசும்பொழுது அந்த வசனம் அவர்களுடைய இருதயத்தில் கிரியை செய்ய நாம் அதற்கு முன்பாகவே ஆண்டவரிடத்தில் ஜெபித்து ஆயத்தப்பட்டு அவர்களுக்காக எப்பொழுதும் அந்த ஆத்துமாக்கள் மேல் வாஞ்சை உள்ளவர்களாக, ஆத்தும பாரமுள்ளவர்களாக நாம் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
“சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனை தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும் அவனை உயிரோடே காக்கும்படியாகவும் அதை அவனுக்குச் சொல்லாமலும் நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான், அவன் இரத்தப்பழியோ உன் கையிலே கேட்பேன்”. ( எசேக்கியேல் 3:18)
நற்செய்தியை சொல்ல வேண்டியது நம்மேல் விழுந்த கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர்களுடைய சொந்த தீர்மானம்.
உங்களுடைய தீர்மானம் என்ன?