ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், செடி கொடிகளையும், விலங்குகளையும், இறுதியாக மனிதனையும் படைத்தார். படைத்தவற்றில் மனிதனை தவிர வேறு எதுவும் தேவ சாயலாக படைக்கப்படவில்லை. ஆதியாகமம் 1:26ல், தேவனுடைய தீர்மானமாக – நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக என்று கூறப்பட்டுள்ளது. 27 வது வசனத்தில் – தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார் என்று காண்கிறோம்.

தேவசாயல் என்றால் என்ன?

தேவசாயலாய் மனிதன் மாத்திரமே படைக்கப்பட்டதால், அந்த சாயலின் குணங்கள் மனிதன் தவிர வேறு எந்த சிருஷ்டிக்கும் காணப்படாது. தேவ சாயலை குறிக்கும் 3 காரியங்களை நாம் வேதத்தில் காணலாம்.

முதலாவது ஆளுமை (ஆதி 1:26)- அவர்கள் (மனிதர்கள்) சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்று வாசிக்கிறோம். தேவனுடைய தன்மை/குணாதிசயமான ஆளுமை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது புத்தி, மூன்றாவது ஞானம்- நீதிமொழிகள் 3:19 கூறுகிறது- கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார் என்று. அதே ஞானம், புத்தி நம்மிடம் கொடுத்திருப்பதை யோபு 35:10 விளக்குகிறது- பூமியின் மிருகங்களை பார்க்கிலும் எங்களை புத்திமான்களும், ஆகாயத்து பறவைகளை பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி… வேறு எந்த சிருஷ்டிக்கும் இல்லாத ஞானமும் புத்தியும் தேவ சாயல் மூலமாய் நாம் பெற்றிருக்கிறோம்.

தேவ சாயலை இழந்தோம்

ஆளுமை, புத்தி, ஞானம் ஆகியவற்றோடு தேவசாயலாக படைக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் தங்கள் தேவ சாயலை உணராதவர்களாக, “புத்தியை தெளிவிக்கிற விருட்சம்” என்று ஏவாள் கண்டு புசித்து புத்தியற்றவர்களானார்கள். அவர்களுக்குள் தேவன் தந்த புத்தியை கெடுத்துப் போட்டார்கள். அவருக்குள்ளேயன்றி வேறு எங்கும் புத்தியும் ஞானமும் நமக்கு இல்லை.

இழந்ததை மீட்டு தந்த நம் தேவன்

தேவ சாயலாக படைக்கப்பட்ட நம்மை தவிர வேறு எந்த சிருஷ்டியும் பாவத்தில் விழவில்லை. சிலுவை மரணத்தின் மூலமாக நம் இரட்சகர் நாம் இழந்த தேவசாயலை மறுபடியும் தரிப்பித்திருக்கிறார். அதனாலேயே நாம் இழந்த ஆளுமை, புத்தி, ஞானத்தை திரும்ப பெற்று புத்தியுள்ள ஸ்திரீ (நீதி 14:1) என்றும் புத்தியுள்ள மனைவி (நீதி 19:14) என்றும் அழைக்கப்படுகிறோம்.

த்தியுடன் நம் ஆத்ம மணவாளனை எதிர்க்கொள்வோம்

மத்தேயு 25வது அதிகாரத்தில் புத்தியுள்ள 5 கன்னிகைகளை குறித்தும், புத்தியில்லாத 5 கன்னிகைகளை குறித்தும் வாசிக்கிறோம். அனைவரும் மணவாளனை எதிர்நோக்கி காத்திருந்த கன்னிகைகளாயிருந்தும், புத்தியுள்ளவர்களே மணவாளனோடு பிரவேசித்தார்கள். தேவனுடைய ஆளுகைக்கும், புத்திக்கும், ஞானத்துக்கும் நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, அவருடைய சாயலை தரித்துக் கொண்ட புத்தியுள்ள ஸ்திரீகளாக நாம் மாற முடியும்.

ஏதேன் தோட்டத்தில் ஆளுமை, ஞானம், புத்தி ஆகிய யாவற்றாலும் நிறைந்திருந்த ஏவாள், புத்தியை தெளிவிப்பதற்காக எடுத்த சுய முடிவின் மூலம் பாவத்திற்கு இடம் கொடுத்தது போல, நாமும் கிறிஸ்துவுக்குள் அல்லாத காரியங்கள் மூலமாய் ஞானம், புத்தி அடைய சாத்தான் காட்டும் யுக்திகளுக்கு செவி சாய்க்காமல் இருந்து, புத்தியுள்ள ஸ்திரீயாக, புத்தியுள்ள மனைவியாக வாழ தேவன் உதவி செய்வாராக!