அன்பான சகோதரிகளே நமக்கெல்லாருக்கும் தெரியும் மாம்பழம் கோடைக்காலத்தில் தான் கனி கொடுக்கும் . மழைக் காலத்திலோ பனிக்காலத்திலோ கனியைத் தேடினால் கிடைக்காது . ஏனென்றால் கோடைக்காலம் தான் அதனுடைய கனி காலம். ஆனால் வேதாகமத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கனி காலம் இல்லாவிட்டாலும் கனி கொடுக்கவில்லை என்று ஒரு அத்திமரத்தை சபித்ததாக மாற்கு எழுதின சுவிசேஷம் 11 ம் அதிகாரம் 13 மற்றும் 14 ம் வசனத்தில் பார்க்கிறோம் . அப்படியென்றால் இப்பிரபஞ்சத்தை தன் வார்த்தைகளாலே சிருஷ்டித்து மற்றும் பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் சீதளமும் உஷ்ணமும் கோடை காலமும் மாரி காலமும் பகலும் இரவும் ஒழிவதில்லை (ஆதியாகமம் 8:2)என்று அருமையாய் எல்லாவற்றையும் நியமித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அத்திப்பழக்காலமாயிராதிருந்தாலும் அந்த மரத்தை சபித்தது ஏனோ?.இது நம்மை உணர்த்துவது என்ன?. நாம் எல்லாக் காலத்திலும் எல்லா சூழ்நிலைகளிலும் ஆவியின் கனி (கலாத்தியர் 5:22,23) கொடுக்கவேண்டும் என்கிறாரோ ?.
 என்னோடு அன்பு கூராதவரோடு நான் அன்பு கூறுவதெப்படி? என்னை மதிக்காதவர்க்கு நான் உதவுவதெப்படி ?
என் மீது வெறுப்பை காண்பிக்கிற மேலதிகாரிக்கு உண்மையாயிருப்பதெப்படி ? குடித்துவிட்டு வந்து சண்டை போடும் கணவனுக்கு நல்ல மனைவியாயிருப்பதெப்படி? இப்படியாக அட்டவணை நீண்டு கொண்டே போகிறதல்லவா? ஆம் எல்லா சூழ்நிலைகளிலும் நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு , தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் . எபேசியர் 2:10
ஆவியின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் எபேசியர் 5:9 எனவே சகோதரிகளாகிய நாம் சாதகமான சூழ்நிலையிலும் பாதகமான சூழ்நிலையிலும் ஆவியின் கனியைக் கொடுக்கவேண்டும்.
ஆவியின் கனி கொடுக்க நாம் ( கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள்) என்ன செய்ய வேண்டும்

  1. பரிசுத்த முள்ளவர்களாய் வாழவேண்டும்.
    மாற்கு 11:15,16,17 வசனங்களில் தேவாலயத்தை சுத்திகரிப்பதை நாம் பார்க்கிறோம் . யோவான் 2:14,15,16,17 வசனங்களில் தேவாலயத்தை சுத்திகரிப்பதையும் அதைப்பற்றிய தான பக்திவைராக்கியத்தையும் நாம் பார்க்கிறோம். எனவே தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாய் இருக்கவேண்டுமென்று வைராக்கியமாய் இருக்கிறார். தேவனுடைய ஆலயம் எது ?. 1கொரிந்தியர் 3:17 ல் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். எனவே தேவன் வாசமாயிருக்கிற ,தேவனுடைய ஆலயமாயிருக்கிற நாம் பரிசுத்த முள்ளவர்களாய் வாழவேண்டும். 1பேதுரு1:15,16 ல் உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்த ராயிருங்கள்.
    நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் வாழும் போது ஆவியின் கனியை கொடுக்க முடியும்.
  2. ஆவியின் கனியைக்கொடுக்க நாம் விசுவாசத்தோடு ஜெபிக்கவேண்டும்.மாற்கு 11:24 நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள் . அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்.எனவே விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். அதோடு கூட யோவான் 15:7 ,8 ன்படி கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார். எனக்கும் சீஷராயிருப்பீர்கள். எனவே வேதம் வாசித்து விசுவாசத்தோடு ஜெபித்து கர்த்தரில் நிலைத்திருக்கும் போது மிகுந்த கனிகளை கொடுக்கமுடியும். நாம் வியாதியள்ளவர்களுக்காக சுகம் கிடைக்க ஜெபிக்கிறோம். ஆனால் யாராவது அவர்களைப்பற்றி விசாரித்தால் பிழைப்பது கடினம் , சுகம் கிடைக்காது என்று அவிசுவாசத்தோடு சொல்கிறோம். ஆனால் யாக்கோபு 5: 15 ல் விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளி யை இரட்சிக்கும் கர்த்தர் அவனை எழுப்புவார் என்று சொல்லுகிறது. எனவே வேதத்தை வாசித்து அதில் நிலைத்திருந்து விசுவாசத்தோடு ஜெபித்து மிகுந்த கனிகளை கொடுப்போம்.
  3. ஆவியின் கனி கொடுக்க மற்றவர்களை மன்னிக்க வேண்டும் .மாற்கு 11: 25,26 ல் நீங்கள் ஜெபம் பண்ணும்போது ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை மன்னிக்கும்படி அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். மற்றவர்களுடைய குறையை நாம் மன்னிக்கும்போது ஆவியின் கனியை வெளிப்படுத்துகிறோம். எப்படியென்றால் அன்பு, நீடிய பொறுமை , தயவு, சாந்தம் மற்றும் நற்குணம் இருந்தால்தான் மன்னிக்க முடியும் . மன்னிக்கும் போது சந்தோஷம் சமாதானம் கிடைக்கிறது . இப்படியாக மன்னிக்கும் போது ஆவியின் கனியை கொடுக்கிறோம் மற்றும் வெளிப்படுத்துகிறோம். அதனால் தேவனுடைய நாமம் மகிமைப் படுகிறது .
    எனவே ஆவியின் கனியை எல்லாக் காலத்திலும் எல்லா சூழ்நிலைகளிலும் கொடுக்க வேண்டுமானால்
  4. பரிசுத்தமாய் வாழ வேண்டும்.
  5. விசுவாசத்தோடு ஜெபம் மற்றும் வேதம் வாசித்து நிலைத்திருக்க வேண்டும்.
  6. மற்றவர்களை மன்னிக்க வேண்டும்
    கர்த்தர் தாமே நீங்கள் ஆவியின் கனியை கொடுக்க உதவி செய்வாராக. ஆமென்.