“யூதருக்கு ராஜாவாக பிறந்து இருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் மத்தேயு 2:2.”

இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே ஒரு மனிதனாக பிறந்தார். அவர் ராஜாவாக பிறந்தார். அவர் பெத்லகேமிலே பிறந்த போது அவரைக் காண கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வந்தார்கள். ஒரு நட்சத்திரம் கிழக்கிலே தோன்றி அவர்களை வழிநடத்தியது. அந்த நட்சத்திரத்தை குறித்து நாம் வாசிக்கும்போது “அவருடைய நட்சத்திரம்” என்று வாசிக்கிறோம். நாம் அனைவரும் ஒரு நட்சத்திரம்தான். இந்த பூமியிலே நாமும் அவருடைய நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ‘இருளில் இருக்கிறவர்கள் பெரிய பிரகாசத்தை கண்டார்கள்’ என்ற வசனத்தின்படி நம்முடைய வெளிச்சம் மற்றவர்கள் முன்பாக பிரகாசிக்க வேண்டும். மத்தேயு 2 ஆம் அதிகாரத்தில் அந்த நட்சத்திரத்தை குறித்து மூன்று காரியங்களை நாம் பார்க்கிறோம்.
- ஈர்க்கும், ஒளிரும் நட்சத்திரம் ( A glowing star – Mt 2:2)
இந்த நட்சத்திரத்தைக் கண்டு அவர்கள் இயேசுவைப் பணிந்து கொண்டு அவரை ஆராதிக்க வந்தார்கள். இன்று நட்சத்திரங்கள் ஆகிய நாம் மற்றவர்களை ஆண்டவருக்கு நேராக அழைகிறவர்களாக இருக்க வேண்டும். நம் வாழ்க்கையைக் கண்டு மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்துகிறவர்களாக, ஆராதிக்கிற வர்களாக இருக்க வேண்டும். நாம் ஒரு நட்சத்திரத்தைப் போல பிரகாசித்து கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்தி அவரைப் பணிந்து கொள்ள தூண்டுகிறவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசியின் சாட்சியுள்ள வாழ்க்கை மற்றவர்களை நம் தேவனிடத்தில் அழைக்கிறவர்களாக இருக்க வேண்டும். இந்த உலகம் தேவனை அல்ல நம்மைத்தான் காண்கிறது “எனவே மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும் படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்ககடவது “என்று மத்தேயு 5 :16-இல் எழுதியிருக்கிறபடி நாமும் தேவனுடைய சுபாவத்தை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும். நம் பிரகாசத்தைக் கண்டு மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். - வழி காட்டும் நட்சத்திரம் (A guiding star – Mt 2:9)
சாஸ்திரிகள் இந்த நட்சத்திரத்தைக் கண்டு இயேசுவைப் பணிந்து கொள்ளப் புறப்பட்டுப் போகையில் அந்த நட்சத்திரம் அவர்கள் முன்னே சென்று அவர்களை வழிநடத்தி,பிள்ளை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்கள் முன் சென்றது என்று மத் 2:9 – ல் வாசிக்கிறோம். அவருடைய நட்சத்திரங்களாகிய நாம் மற்றவர்களை ஆண்டவருக்கு நேராக கொண்டுவர அவர்கள் முன் சென்று, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். நம்முடைய வெளிச்சம் அவர்கள் முன் பிரகாசித்து, அந்தகாரத்தில் தேவனை அறியாமல் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களை ஆண்டவருக்கு நேராக வழிகாட்ட பிரகாசிக்க வேண்டும். பாவ இருளில் வாழும் ஜனங்கள் அவர்கள் செல்லும் வழியில் சென்றால் அதின் முடிவு நரகம்தான். ஆனால் அவர்களை நித்திய ஜீவனுக்கு பங்கு உள்ளவர்களாக மாற்ற நாம் அவர்கள் முன் சென்று வழிகாட்டும் நட்சத்திரங்களாக இருக்க வேண்டும். நீதியின் சூரியனாகிய தேவனிடத்தில் மற்றவர்களை கொண்டு வருகிறவர்களாக நாம் இருப்போம். “அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போல என்றைக்கும் சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” என்று தானி 12 :3 -ல் சொல்லப்பட்ட வண்ணமாக நாமும் பிரகாசிப்போம். - ஆனந்தம் தரும் நட்சத்திரம் (A gladdening star – Mt 2:10)
அவர்களது நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷம் அடைந்தார்கள் என்று மத் 2:10 -ல் வாசிக்கிறோம். அந்த நட்சத்திரம் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தந்தது. அப்படி என்றால் அவருடைய நட்சத்திரங்களாகிய நாம் மற்றவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தைக்கொண்டு வருகிறவர்களாக இருக்கவேண்டும். இந்த உலகம் கொடுக்கும் சந்தோஷம் அல்ல. நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கிற நம்முடைய வெளிச்சத்தைக் கண்டு துக்கத்தில் இருக்கிற ஜனங்கள் சந்தோஷம் அடைவார்களா? நம்மை சுற்றிலும் தேவையில் இருக்கும் அனேக ஜனங்களுக்கு நாம் எவ்வாறு உதவி செய்கிறோம்? நம் மகிழ்ச்சியை அவர்களோடு எவ்வாறு பகிர்ந்து கொள்கிறோம்? ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை நாம் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறோமோ? அல்லது சுயநலமாக வாழ்கிறோமா? துக்கத்தில் இருக்கிற, இருளில் இருக்கிற அநேகருடைய வாழ்க்கையில் நாம் ஒளியை, மகிழ்ச்சியை கொண்டு வருகிறோமா? அவருடைய நட்சத்திரங்களாகிய நம்மை காண்கிற அவர்கள் உண்மையான மகிழ்ச்சி அடைவார்களா? இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அகில உலகத்திற்கும் சந்தோஷத்தை கொடுத்தது போல ,அவரை அறியாமல் துக்கத்திலும், பாவத்தின் அடிமைத் தனத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு நாம் ஏன் சந்தோஷத்தைக் கொடுக்கும் நட்சத்திரங்களாக மாறக்கூடாது? இன்றைக்கும் கிறிஸ்து அநேகருடைய உள்ளத்தில் பிறக்கவும், அவர்கள் துக்கம் சந்தோஷமாய் மாறவும் நாம் ஒரு சந்தோஷம் தரும் நட்சத்திரங்களாக மாறுவோம்.
நட்சத்திரங்களை நம் வீட்டின் வெறும் ஒரு அலங்காரப் பொருளாக வைக்காமல் நாமே ஒரு நட்சத்திரத்தைப் போல பிரகாசிக்க தேவன் தாமே நம் அனைவருக்கும் உதவி செய்வாராக. ஆமென்.